Monday, October 11, 2010

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?     

    அரசு பள்ளிகளை பற்றி ஒரு தவறான இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஒரு மட்டமான எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது என்பது மிகவும் உண்மை. இதற்கு யார் காரணம் அரசா? அரசியல் வாதிகளா? அல்லது மக்களா? என்று பகுத்து ஆய்வதுவே இந்த மடலின் நோக்கம்.

     நாட்டுகாக உழைப்பதாய்  மார் தட்டிக்கொள்ளும் எத்தனை அரசியல் வாதிகளின் குழந்தைகள் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்?  சரி அவர்கள் தான் போகட்டும் எத்தனை அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் நகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்? சரி அவர்களையும் விட்டுவிடலாம்  அந்த பள்ளிகளில் பணிபுரியும் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிகிறார்கள் ? வேதனையான உண்மை என்ன வென்றால் அவர்களின் குழந்தைகளே வேறு தனியார் பள்ளிகளில் படிகிறார்கள். ஆக அந்த ஆசிரியர்களுக்கே தங்களின் திறமையில் நம்பிக்கை இல்லையா? அல்லது அரசு, பள்ளிகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவது இல்லையா என்று பார்த்தோமானால் அரசு மற்றும் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த புறகணிப்பு தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
        சரி இதை சரிப்படுத்தி கல்வி கூடங்களின் நிலைமையை மேம்படுத்த என்ன செய்யலாம் ?
 முதல் கட்டமாக அரசு பணிபுரியும் அனைவரின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் கல்வி பயில வேண்டும் என்பதை கட்டாய படுத்த வேண்டும் மீறி அவர்கள் தனியார் பள்ளிகளை படிக்கவைக்க விரும்பும் பட்சத்தில் அதே  தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை அரசுக்கு செலுத்திவிட்டு தனியார் பள்ளியில் படிக்கவைக்க அனுமதிக்கலாம் இந்த மாற்று திட்டத்தினால் அரசுபள்ளிகளில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் குழந்தைகள் அதிகம் படிப்பதால் மாற்றந்தாய் மனபோக்கு மாறி பள்ளிகளின் தரம் மேம்படும்.

Monday, September 27, 2010

பள்ளி குழந்தைகளுக்கு தனி பயிற்சி(Tution) வரமா சாபமா ?

      இன்றைய  குழந்தைகளின் கல்வி தேடலின் பாதையை சற்று உற்று நோக்கினால் நமது மனம் கனத்து விடும். அதிகாலையில் முதுகில் புத்தக சுமையுடன் பள்ளிகிளம்பும் பிள்ளைகள்  மாலையில் உடலும் மனமும் சோர்ந்து வீடு திரும்பும் குழந்தைகளை அத்துடன் விடுவதில்லை பெற்றோர் மறுபடியும் மாலையில் புத்தக மூட்டை முதுகில் ஏற்றப்பட்டு , சுமைதூக்கும் கழுதையாய் தனி பயிற்சிக்காய் ஒரு கூடுதல் பயணம்.
     குழந்தைகளை கொடுமை படுத்தும் இந்த அவலத்திற்கு  யார் காரணம் ? கல்வி புதையல் தேடும் பெற்றோரா ? அல்லது காசுக்கு கடைவிரித்திருக்கும் கல்வி நிறுவனங்களா? விடை தேடி பயணித்தால் கல்விநிறுவனங்கள் மற்றும் பெற்றோரின் பேராசைக்கும் கனவுகளுக்கும் பலியாகி போனது குழந்தைகளின் நிகழ்காலம் மட்டுமல்ல ஆரோக்கியமான வருங்கால இந்தியா என்ற கனவும் தான் !
   சரி இந்த தனி பயிற்சிக்கு என்ன அவசியம் ? அப்படியானால் பள்ளிகளில் என்ன தான் சொல்லி கொடுகிறார்கள்? சரியான முறையில் பள்ளிகளில் சொல்லிகொடுபதிலையா ? அப்படி சொல்லிகொடுக்கதானே கட்டணமாக பெரும்தொகையை கொட்டிகொடுகிறோம் பிறகு ஏன்  தனிபயிற்சி என்று என்ற பெற்றோரும் சிந்திப்பதும் இல்லை தட்டிகேட்பதும்  இல்லை. பெற்றோரின் பொறுப்பின்மையும், மற்றபடி தட்டி கேட்க துணியாத மனோபாவம் மற்றும் பேராசையும் குழந்தைகளின் முதுகில் சுமையாய் அழுத்துவது தான் நிஜம்.
    இந்த அவலத்தில் பெற்றோரின் பங்கு அதிகம். எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் கல்விகற்றுகொள்ள அனுப்புகிறோம் கல்வி கற்றால் போதும் என்று எண்ணுவதில்லை அதற்கும் மேலாக முதல் மதிப்பெண், முதல் மாணவன், படித்து முடித்தவுடன் பெட்டிபெட்டியாய் வாங்க போகும்   ஊதியம் மட்டுமே முதன்மையாய் கருதுவதின் விளைவு தங்களின் பிள்ளைகளின் முதுகில் ஏற்றிய சுமை.
   பள்ளிகளோ பணத்தில் குறியாய் இருக்கும் அளவு கல்வித்தரத்தில் குறியாய் இருபதில்லை.தகுதி குறைவான ஆசிரியர்கள், அதிக பளு நிறைந்த  பாடத்திட்டம் இப்படி பல காரணங்கள். கட்டண குறைபிற்காக போராடும் பெற்றோரும், கூடுதல் கட்டணத்திற்காக போராடும் குழந்தைகளை பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை.
 
 ஆக மொத்தத்தில் , குறைபாடு உடைய குழந்தைகள் மற்றும் மெதுவாக கற்கும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமான இந்த தனிபயிற்சி ஏனைய குழந்தைகளுக்கு சாபமாய் போனது உண்மை. ஆனால் இந்த சுமை பெற்றோர்களும் சமுதாயமும் வலுகட்டாயமாக வலிந்து  பிஞ்சுகளின் முதுகில் ஏற்றிய சுமை என்பது தான் வேதனை நிரம்பிய உண்மை .

Tuesday, June 22, 2010

அரசின் கல்விகடன்

சமீபத்திய நாளிதழ் ஒன்றில் அரசின் கல்விகடன் பற்றிய அறிவிப்பை படித்தேன், படித்தவுடன் நிறைய முரண் பாடுகள் அரசின் கல்வி கொள்கைகளில் இருப்பதாக எனக்கு தோன்றியது அதன் பாற்பட்டதே இந்த அஞ்சல்.இந்திய அரசியல் அமைப்பு சட்ட படி அனைவருக்கும் பள்ளி கல்வி என்று சொல்கிறோம் ஆனால் அந்த பள்ளி கல்வியே செல்வந்தருக்கு வசதி படைத்த விதத்திலும், எளியவர்க்கு வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளிலும் கிடைப்பது மிகவும் வருந்த வேண்டிய ஒன்று தானே ?

சட்டப்படி கல்வி நிறுவனங்கள் லாப நோக்கில் நிறுவப்பட கூடாது ஆனால் உண்மையில் நடப்பது என்ன இன்று வரை தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றிசல் போல கிளம்பிவிட்டன. அரசு அதிகாரிகளின் துணையுடன் அரசியல் வாதிகள் துவங்கும் நிறுவனங்களே அதிகம் இதே நிலை நீடித்தால் என்ன ஆகும் ?

என்ன ஆகும் என்று நான் சொல்வதை விட சின்ன உதாரணம் ஒன்றை நான் குறிப்பிட்டாலே நீங்களே புரிந்துகொள்ள முடியும் . எண்பதுகளில் சுற்றுலா பேருந்தாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அனுமதியில்லாமல் கட்டண பேருந்து போல் பயந்து பயன்படுத்திய காலம் போய் இன்று தனி பேருந்து நிலையமே கட்டி தந்து உள்ளது அரசு. இதை போன்ற வணிக ரீதியான லாபநோக்கோடு தனியார் கல்வி நிறுவனங்கள் செயல் பட தான் இந்த கல்வி கடன் உதவி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை அல்லவா?. என்று தனியார் மயமாக்கல் மற்றும் சந்தை பொருளாதாரம் நமது நாட்டில் விதிக்கப்பட்டதோ அன்றே கல்வி வணிகத்துக்கு கொல்லைப்புறமாக அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.
இதன் விளைவு காலபோக்கில் என்னவாக இருக்கும் ? சாமானியனுக்கும் கடன் வசதி கிடைக்கும் என்று அமைச்சர்கள் ஆரவரிபர்கள் , சாமானியனும் கடன் கிட்டிய மகிழ்ச்சியில் திளைப்பான் ஆனால் உண்மையில் என்ன நடக்கும். சாமானியனின் வரிப்பணம் வங்கிகள் மூலம் அவனுக்கே கடனாக கொடுக்கப்பட்டு கல்வி வியாபாரிகள் கல்லாவில் கொண்டுபோய் சேர்க்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆகமொத்தத்தில் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது என்பதில் சந்தேகம் எஅதும் இல்லை, அப்படி வியாபாரமாக மறைமுகமாக அங்கிகாரம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் ? நமது கல்வி வியாபாரிகளின் துணையுடன் உலகளவில் கொள்ளை பணம் பங்கு போடப்படும் என்பதே உண்மை !!!!!!!!