ஊழலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எழுச்சியுடன் போராட முற்படும் இக்கால கட்டத்தில், இன்றைய அரசியல் சமுதாய சுழலில் இந்த மாற்றம் வருவது சாத்தியமா என்ற எண்ணம் நம் மனங்களில் ஏற்படாமல் இல்லை. உண்மையில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் நமது அரசு இயந்திரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தால் அன்றி ஊழல் அற்ற சமுதாயம் ஏற்படுத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லி கனி. இந்த மாற்றங்கள் முதலில் காவல் துறையில் இருந்தே தொடங்க வேண்டும்.
ஆள்வோரின் அடிவருடிகளாக, ஆள்வோரின் கைப்பாவைகளாக செயல்படும் காவல்துறையின் நிலைமை பரிதாபம். எவ்வளவோ காலம் போராடியும் சொந்தமாக ஒரு சங்கம் கூட துவங்க முடியாத நிலைமையில் அவர்களால் எப்படி நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட முடியும். 2001 களில் உச்ச நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான விஷயத்தை கோடிட்டு காட்டியது அதன் படி காவல் துறையில் என்ன என்ன மாற்றங்கள் உடனடியாக தேவை என்பதை பட்டியல் இட்டு உடனடியாக நிறைவேற்ற ஆலோசனை வழங்கியது.
ஆனால் துர்அதிஷ்டவசமாக இன்றுவரை எந்த ஒரு மாநிலமும் அதனை ஏற்று முழுமையாய் செயல்படுத்த முன்வரவில்லை காரணம்? காவல்துறை சுதந்திரமாய் நேர்மையாய் செயல்பட ஆரம்பித்துவிடும் அப்படி செயல் பட ஆரம்பித்துவிட்டால், ஊழல் செய்வோருக்கு காவலாய் எவலராய் நிற்கும் காவல்துறை மக்கள் பணியே மகேசன் பணி என்று செயல் பட ஆரம்பித்துவிடும். விளைவு ஊழலின் இருப்பிடமாம் அரசியல் சாக்கடை சுத்த படுத்தப்படும்.
இன்றைய காலகட்டத்தில் இதற்கு சாத்தியம் இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை !!! ஒருவேளை ஒருவிழிப்புணர்வு ஏற்பட்டு யாரேனும் இதற்கும் நீதி மன்றத்தை அணுக வேண்டி இருக்குமோ என்னவோ ?!?