Monday, May 5, 2014

தமிழகத்தை வளமாக்க முதல் எட்டை எடுத்து வைக்கப்போவது யார் ?

கருவேல மரங்கள்
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ஆண்டவர்களும் சரி ஆள்பவர்களும் சரி, மக்களுக்காகவே வாழ்வதாக சொல்லிகொள்ளும் அரசியல் வாதிகளும் சரி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாய் ஒரு தொலைநோக்கு பார்வையில் செயல் படவில்லை என்பதே உண்மை ! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறதே தவிர அரசும் அரசு இயந்திரமும் ஏன் சமூக ஆர்வலர்களும் சரி இவற்றை பற்றி கவலை படுவதில்லை என்பதே வருத்தமான உண்மை !!

எப்பொழுதாவது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்து உள்ளீர்களா ? அப்படி பயணம் செய்து இருந்தால் உங்களுடனே பயணம் முழுவதும் பசுமையாய் தொடர்ந்து வரும் கருவேல மரங்களை கவனித்து இருக்க தவறி இருக்க மாட்டீர்கள். கோடையிலும் பசுமை போங்க நிழல் விரிக்கும் அவைகளை பார்த்து ஆச்சரியப் பட்டு இருப்பீர்கள். கோடையிலும் பசுமையாய் இருக்கும் இந்த கருவேல மரங்கள் உண்மையில் ஆட்சியாளர்களின் அலட்சியம் சமூக ஆர்வலர்களின் கவன குறைவு இவற்றின் ஒட்டு மொத்த அடையாளம் தான் அவை. சுருங்க சொல்வதனால் வறட்சி எனும் சுடுகாட்டில் தமிழகத்தின் தலைமாட்டில் ஊன்றப்பட்ட மரம்தான் இந்த கருவேல மரங்கள்.

கருவேல மரங்கள்
தொலைநோக்கு பார்வை என்பதே தமிழகத்தை நீண்ட நெடுங்காலமாக ஆண்டுவரும் ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதற்கு தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கருவேல மரங்கள் என்று சொல்லப்படும் காட்டுக்கருவை மரங்களே சாட்சி. 1960 களில் தமிழகத்தின் வறட்சியை போக்கும் விதமாக இந்த மர விதைகள் ஆகாய விமானங்கள் மூலம் விமானத்தின் உதவியால் தூவப்பட்டன எனவும் மற்றொரு சாரார் இல்லை இல்லை இலவச மதிய உணவுக்காக அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட கோதுமையில் திட்டமிட்டே கலந்து அனுப்பப்பட்டது எனவும் கூறுவார். எது எப்படியோ அன்று ஊன்றப்பட்ட விஷ வித்து விஷமரமாய் தமிழகம் எங்கும் பல்கி பெருகி விட்டது.

இந்த கருவை மரங்கள் கடும் வறட்சியை தாங்கக் கூடியவை, ஆழமாக நீண்டு செல்லும் வேர்கள் நிலத்தின் அடியே ஆழமாக சென்று ஒட்டுமொத்த நிலத்தடி நீரையும் உறிஞ்சி யெடுக்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. இம் மரங்களின் இலைகளோ காற்றில் நிறைந்து இருக்கும் ஈர ப் பதத்தை ஒட்டுமொத்தமாக உறிஞ்சி அருகில் இருக்கும் பிற பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பவை . மரத்தின் மேற் பகுதி தீயினால் கருக்கப் பட்டாலும் அடிமரத்தில் இருந்து மீண்டும் துளிர்க்க கூடியவை மொத்தத்தில் அவை பீனிக்ஸ் பறவை போன்றவை என்றால் மிகை இல்லை.

இம்மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை அப்படியே ஈர்த்துக்கொள்வதால் மழை பெய்யும் வாய்ப்பு பெருமளவு குறைவதுடன் இருக்ககூடிய பயிர்களும் வறட்சி தாங்காது காய்ந்து கருகி விடும். இவ்வளவு தீமைகள் இம் மரங்களால் ஏற்படுவதை தெரிந்து கொண்ட கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் போர்கால அடிப்படையில் விரைந்து செயல் பட்டு முற்றிலுமாக தங்கள் மாநிலங்களில் இருந்து அகற்றி விட்டன. ஆனால் நம் தமிழகத்திலோ ஆட்சியாளர்களிடமும் சரி பொது மக்களாகிய நம்மிடமும் சரி ஏற்படவில்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை ! இந்த கருவேல மர ஒழிப்பு துவங்குமுன் சில திட்டமிடல் அவசியம் !

முதலில் இந்த கருவேல மரங்களின் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை மாநில மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இந்த மரங்களை வெட்டி கரியாக்கி விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு உள்ள சில ஆயிரம் மக்களை மாற்று தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.

மீட்கப்படும் நிலத்தின் அளவு மற்றும் தன்மைகளை கருத்தில் கொண்டு விளை நிலங்களாகவும் நீர் ஆதாரங்களாகவும் மாற்ற வேண்டும்.

மீட்டெடுக்க படும் நிலங்களின் பெரும்பகுதி நிலத்தடி நீரை அதிக படுத்தும் வகையில் நீர் நிலைகளாக மாற்றும் வகையில் திட்டமிடல் வேண்டும்.

இவை அனைத்தும் முறையாக திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டால் இன்னும் கணிசமான அளவு விளைநிலங்கள் மீட்டெடுக்கப்படும், நீர் ஆதாரங்கள் அதிகரிப்பதனால் வேளாண்மை சிறப்படையும், நீர் மேலாண்மையில் முன்னேற்றம் ஏற்படும் !

இதற்கான முதல் எட்டை எடுத்து வைப்பவர் யார் ?

0 comments:

Post a Comment