Saturday, November 10, 2012

மக்கள் நல அரசு ???

இந்த தலைப்பு கேள்வி பட்ட வார்த்தைகளாய் தெரியுது இல்லையா ? ஆம் நமது மத்திய மாநில அரசுகள் மக்கள் நல அரசாக இந்திய அரசியல் அமைப்பு படி செயல் பட வேண்டும் ஆனால் உண்மையில் அப்படி செயல் படுகின்றனவா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இன்றைய அரசுகள் எல்லாமே ஒரு லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனம் போலவே செயல்படுகின்றன. மக்கள் நலம் என்ற வார்த்தையை அதன் பொருளை மறந்து தம் நலம் தம் மக்கள் நலம் என்ற நோக்கிலேயே செயல்படுகின்றன. மக்களின் தேவைக்கு மட்டுமே அரசு நிர்வாகம் என்ற நிலை மாறி அரசின் நலத்திற்கும் வசதிக்குமே மக்கள் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் மின்கட்டண உயர்வு பேருந்து கட்டண உயர்வு இவற்றை குறிப்பிடலாம்.
ஆளுவோர் மக்கள் நலனுக்காக ஆளுவதில்லை தங்கள் 5 வருட ஆட்சி காலம் தங்கள் எண்ணப்படி அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தற்போதைய கல்வி கொள்கை ஆகட்டும் , ஆன்லைன் வர்த்தக அனுமதி ஆகட்டும், பொது துறை பங்குகளை விற்பனை செய்வதாகட்டும் எல்லாமே தங்களின் சுய லாப நோக்கு அல்லது தாம் சார்ந்தவர்களின் நலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல் படுகிறார்கள் என்பதே உண்மை. தனது அன்றாட வயற்றுபட்டுக்கே தன் உழைப்பை விற்க வேண்டியிருக்கும் அன்றாடம் காய்ச்சி உண்மையில் தாம் ஏமாற்ற படுவது தெரிந்தும் கையறு நிலைமையில் எதுவும் செய்ய சக்தியற்று விரக்தியின் உச்சத்தில் நிற்கிறான் என்பதே உண்மை. மக்களின் அறிவை வளர்க்க பயன்பட வேண்டிய கல்வி, முதலாளிகளால் கடை சரக்காய் விற்கபடுகிறது. விற்கப்படும் கல்வியும் மக்களை பணம் சம்பாதிக்கும் எந்திரமாக மட்டுமே உருவாக்குகிறது. மக்கள் நலனில் மிக முக்கியமான "ஆரோக்கியம் " பெரு முதலாளிகளின் மருத்துவ மனைகளுக்கு குடிபெயர்ந்து விட்டன. எந்த ஒரு அரசியல் வாதியோ, உயர் அதிகாரிகளோ அல்லது அவர்கள் குடும்பத்தினரோ அரசு பொதுமருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை பெறுகி றார்களா அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் தான் படிக்கிறார்களா ? அவர்களுக்கு தெரியும் தங்கள் நிர்வாகம் பற்றி. -தொடரும் -

Saturday, December 3, 2011

காவல் துறை சீரமைப்பே ஊழலை நசுக்க உடனடி தேவை !!!

ஊழலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எழுச்சியுடன் போராட முற்படும் இக்கால கட்டத்தில், இன்றைய அரசியல் சமுதாய சுழலில் இந்த மாற்றம் வருவது சாத்தியமா என்ற எண்ணம் நம் மனங்களில் ஏற்படாமல் இல்லை. உண்மையில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் நமது  அரசு இயந்திரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தால் அன்றி ஊழல் அற்ற சமுதாயம் ஏற்படுத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லி கனி. இந்த மாற்றங்கள் முதலில் காவல் துறையில் இருந்தே தொடங்க வேண்டும்.

ஆள்வோரின் அடிவருடிகளாக, ஆள்வோரின் கைப்பாவைகளாக செயல்படும் காவல்துறையின் நிலைமை பரிதாபம். எவ்வளவோ காலம் போராடியும் சொந்தமாக ஒரு சங்கம் கூட துவங்க முடியாத நிலைமையில் அவர்களால் எப்படி நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட முடியும். 2001  களில் உச்ச நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான விஷயத்தை கோடிட்டு காட்டியது அதன் படி காவல் துறையில் என்ன என்ன மாற்றங்கள் உடனடியாக தேவை என்பதை பட்டியல் இட்டு உடனடியாக நிறைவேற்ற ஆலோசனை வழங்கியது.

ஆனால் துர்அதிஷ்டவசமாக இன்றுவரை எந்த ஒரு மாநிலமும் அதனை ஏற்று முழுமையாய் செயல்படுத்த முன்வரவில்லை காரணம்?  காவல்துறை சுதந்திரமாய்  நேர்மையாய்    செயல்பட ஆரம்பித்துவிடும்    அப்படி செயல் பட ஆரம்பித்துவிட்டால், ஊழல் செய்வோருக்கு காவலாய் எவலராய் நிற்கும் காவல்துறை மக்கள் பணியே மகேசன்  பணி என்று செயல் பட ஆரம்பித்துவிடும். விளைவு ஊழலின் இருப்பிடமாம் அரசியல் சாக்கடை சுத்த படுத்தப்படும்.

இன்றைய காலகட்டத்தில் இதற்கு சாத்தியம் இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை !!! ஒருவேளை ஒருவிழிப்புணர்வு ஏற்பட்டு யாரேனும் இதற்கும் நீதி மன்றத்தை அணுக வேண்டி இருக்குமோ என்னவோ ?!?

Thursday, March 17, 2011

உழைப் பாளியை அதிகம் சுரண்டுவது முதலாளி களா அல்லது ஆள்வோரா ?



          நம் நாட்டில் மட்டுமல்லாது  இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷயம் பொதுவானது. என்று மனிதன் நாடோடி வாழ்க்கையை விட்டுவிலகி வசதியான நாகரிக வாழ்கை வாழத் தலைப்பட்டானோ அன்று துவங்கிய இது இன்றுவரை முடிவில்லாது தொடர்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் மனிதனை இரு வர்க்கமாக மட்டுமே பிரிக்கலாம். ஒன்று சுரண்டுவோர் மற்றொன்று  சுரண்டபடுவோர். இந்த இரண்டும் மாறாத இரு பிரிவுகள். முதலாளித்துவ கட்டமைப்பில் முதலாளி  உழைப்பளியை சுரண்டும் நிலை இருந்தது. தொழிலாளி வர்க்க அமைப்பில் உழைப்பாளி  பணம் படைத்தவரை கட்டுப்படுத்தும் நிலைமை இருப்பினும் இரண்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இந்த விஷயத்தை உலக அளவில் பார்ப்பதை விட நம் நாட்டளவில் பார்ப்பது எனக்கும் உங்களுக்குமான புரிதலுக்கு எளிமையாய் இருக்கும் என்பதால் நாம் நாட்டளவில் மட்டும் இதை பார்போம்.

         நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது இந்த வேறுபாடுகள் பெரியதாக இருந்தன. இந்த வேறுபாட்டை களைய அரசாங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்தது அதுவரையில் ஒரு இனத்தோடு மட்டும் போராடி வந்த சுரண்டபடுவோன் அதன் பிறகு அரசையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. புரியவில்லையா? சரி புரியும் படி சொல்கிறேன்.

முதன் முதலில் இந்த வேறுபாடுகளை களைய அரசு அரசுடமை , மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற வற்றில் இறங்கியது. துவக்கத்தில் அரசுஉடமை ஆக்கப்பட்ட வங்கிகளை மட்டும் உதாரணத்திற்கு பார்போம். அன்று அரசின் நோக்கம் சுரண்டலுக்கு எதிராக இருந்தது, எனவே அரசே கையகபடுத்தி சுரண்டலுக்கு எதிரான பணியை துவங்கியது. ஆனால் இன்று நிலைமை என்ன ?
 இன்று இதே வங்கிகள் (அரசு ) மற்ற்றொரு சுரண்டும் இனமாக மாறிவிட்டது தான் சமுக அவலம். மக்கள் வசதிக்காக என்று துவங்கப்பட்ட வங்கிகள் வசதிகளை கொடுத்து அதிகம் சுரண்டுவது தான். இன்றைய அளவில் வங்கி கணக்கு இல்லாதோரே இல்லை என்பதால் இது எளிதில் புரியும் என நினைகிறேன்.
             ஒரு நிலையில் அரசு நிர்வாக செலவுகளுக்காக மற்றும் மேம்பாடுகளுக்காக வரி விதிக்கப்பட்டது. இன்று எதில் எல்லாம் வரி போட்டு அரசு வருவாய் மேம்படுத்தலாம் என்று ஆராயவே குழுக்களை அமைக்கும் அவலம் காண முடிகிறது.
முன்னாளில் நிலக்கிழார்கள் தங்கள் உழை ப்பாளிகளை  அடிமைப்படுத்த பயன் படுத்திய சாராய கடைகள் இன்று அரசாங்கத்தின் காமதேனுவாய் ,உழைப்பவன் உழைப்பால் வந்த வருமானத்தை சுரண்டுகின்றன.

 இந்த சுரண்டல் பட்டியல் முடிய வில்லை......          ஆனால்  தற்காலிகமாக முடித்து வைக்க படுகிறது