Saturday, December 3, 2011

காவல் துறை சீரமைப்பே ஊழலை நசுக்க உடனடி தேவை !!!

ஊழலுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எழுச்சியுடன் போராட முற்படும் இக்கால கட்டத்தில், இன்றைய அரசியல் சமுதாய சுழலில் இந்த மாற்றம் வருவது சாத்தியமா என்ற எண்ணம் நம் மனங்களில் ஏற்படாமல் இல்லை. உண்மையில் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்றால் நமது  அரசு இயந்திரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தால் அன்றி ஊழல் அற்ற சமுதாயம் ஏற்படுத்த முடியாது என்பது உள்ளங்கை நெல்லி கனி. இந்த மாற்றங்கள் முதலில் காவல் துறையில் இருந்தே தொடங்க வேண்டும்.

ஆள்வோரின் அடிவருடிகளாக, ஆள்வோரின் கைப்பாவைகளாக செயல்படும் காவல்துறையின் நிலைமை பரிதாபம். எவ்வளவோ காலம் போராடியும் சொந்தமாக ஒரு சங்கம் கூட துவங்க முடியாத நிலைமையில் அவர்களால் எப்படி நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட முடியும். 2001  களில் உச்ச நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான விஷயத்தை கோடிட்டு காட்டியது அதன் படி காவல் துறையில் என்ன என்ன மாற்றங்கள் உடனடியாக தேவை என்பதை பட்டியல் இட்டு உடனடியாக நிறைவேற்ற ஆலோசனை வழங்கியது.

ஆனால் துர்அதிஷ்டவசமாக இன்றுவரை எந்த ஒரு மாநிலமும் அதனை ஏற்று முழுமையாய் செயல்படுத்த முன்வரவில்லை காரணம்?  காவல்துறை சுதந்திரமாய்  நேர்மையாய்    செயல்பட ஆரம்பித்துவிடும்    அப்படி செயல் பட ஆரம்பித்துவிட்டால், ஊழல் செய்வோருக்கு காவலாய் எவலராய் நிற்கும் காவல்துறை மக்கள் பணியே மகேசன்  பணி என்று செயல் பட ஆரம்பித்துவிடும். விளைவு ஊழலின் இருப்பிடமாம் அரசியல் சாக்கடை சுத்த படுத்தப்படும்.

இன்றைய காலகட்டத்தில் இதற்கு சாத்தியம் இல்லை என்பதே வருத்தம் கலந்த உண்மை !!! ஒருவேளை ஒருவிழிப்புணர்வு ஏற்பட்டு யாரேனும் இதற்கும் நீதி மன்றத்தை அணுக வேண்டி இருக்குமோ என்னவோ ?!?

Thursday, March 17, 2011

உழைப் பாளியை அதிகம் சுரண்டுவது முதலாளி களா அல்லது ஆள்வோரா ?



          நம் நாட்டில் மட்டுமல்லாது  இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் விஷயம் பொதுவானது. என்று மனிதன் நாடோடி வாழ்க்கையை விட்டுவிலகி வசதியான நாகரிக வாழ்கை வாழத் தலைப்பட்டானோ அன்று துவங்கிய இது இன்றுவரை முடிவில்லாது தொடர்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் மனிதனை இரு வர்க்கமாக மட்டுமே பிரிக்கலாம். ஒன்று சுரண்டுவோர் மற்றொன்று  சுரண்டபடுவோர். இந்த இரண்டும் மாறாத இரு பிரிவுகள். முதலாளித்துவ கட்டமைப்பில் முதலாளி  உழைப்பளியை சுரண்டும் நிலை இருந்தது. தொழிலாளி வர்க்க அமைப்பில் உழைப்பாளி  பணம் படைத்தவரை கட்டுப்படுத்தும் நிலைமை இருப்பினும் இரண்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இந்த விஷயத்தை உலக அளவில் பார்ப்பதை விட நம் நாட்டளவில் பார்ப்பது எனக்கும் உங்களுக்குமான புரிதலுக்கு எளிமையாய் இருக்கும் என்பதால் நாம் நாட்டளவில் மட்டும் இதை பார்போம்.

         நம் நாடு சுதந்திரம் அடையும் பொழுது இந்த வேறுபாடுகள் பெரியதாக இருந்தன. இந்த வேறுபாட்டை களைய அரசாங்கம் இந்த பிரச்சனையை கையில் எடுத்தது அதுவரையில் ஒரு இனத்தோடு மட்டும் போராடி வந்த சுரண்டபடுவோன் அதன் பிறகு அரசையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. புரியவில்லையா? சரி புரியும் படி சொல்கிறேன்.

முதன் முதலில் இந்த வேறுபாடுகளை களைய அரசு அரசுடமை , மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற வற்றில் இறங்கியது. துவக்கத்தில் அரசுஉடமை ஆக்கப்பட்ட வங்கிகளை மட்டும் உதாரணத்திற்கு பார்போம். அன்று அரசின் நோக்கம் சுரண்டலுக்கு எதிராக இருந்தது, எனவே அரசே கையகபடுத்தி சுரண்டலுக்கு எதிரான பணியை துவங்கியது. ஆனால் இன்று நிலைமை என்ன ?
 இன்று இதே வங்கிகள் (அரசு ) மற்ற்றொரு சுரண்டும் இனமாக மாறிவிட்டது தான் சமுக அவலம். மக்கள் வசதிக்காக என்று துவங்கப்பட்ட வங்கிகள் வசதிகளை கொடுத்து அதிகம் சுரண்டுவது தான். இன்றைய அளவில் வங்கி கணக்கு இல்லாதோரே இல்லை என்பதால் இது எளிதில் புரியும் என நினைகிறேன்.
             ஒரு நிலையில் அரசு நிர்வாக செலவுகளுக்காக மற்றும் மேம்பாடுகளுக்காக வரி விதிக்கப்பட்டது. இன்று எதில் எல்லாம் வரி போட்டு அரசு வருவாய் மேம்படுத்தலாம் என்று ஆராயவே குழுக்களை அமைக்கும் அவலம் காண முடிகிறது.
முன்னாளில் நிலக்கிழார்கள் தங்கள் உழை ப்பாளிகளை  அடிமைப்படுத்த பயன் படுத்திய சாராய கடைகள் இன்று அரசாங்கத்தின் காமதேனுவாய் ,உழைப்பவன் உழைப்பால் வந்த வருமானத்தை சுரண்டுகின்றன.

 இந்த சுரண்டல் பட்டியல் முடிய வில்லை......          ஆனால்  தற்காலிகமாக முடித்து வைக்க படுகிறது

Sunday, February 13, 2011

வலை பதிவாளர்கள் மேல் அரசின் அறிவிக்காத தணிக்கைமுறை

சீனாவை பொறுத்தவரை இன்டர்நெட் பயன்பாடு என்பது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒன்று என்பதால் அதுகுறித்த அரசின் அணுகுமுறை என்பது வெளிப்படையான ஒன்று எனவே மாற்று கருத்துக்கோ, கேள்விகளுக்கோ அங்கு இடமில்லை , ஆனால் சமீப காலமாக இந்தியாவில் இன்டர்நெட் மற்றும் பதிவாளர்கள் (bloggers) மீது மறைமுகமாக தணிக்கை முறை ஏவி விடப்பட்டு உள்ளதாகவே தோன்றுகிறது.
முதலாவதாக பதிவாளர்களின் paypal  கணக்குகளின் மீது கடுமையான சட்ட திட்டங்கள் ஏவி விடப்பட்டன. அதன்படி பதிவாளர்கள் டாலர்களில் சம்பாதிக்கும் அன்னியசெலாவணி அப்படியே இந்திய வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகள் ஏவிவிடபட்டுளன.
 சமீபகாலத்தில், மத்திய மாநில அரசுகளை பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகள் விமர்சிததைவிட வலை பதிவாளர்கள் விமர்சித்ததுதான் அதிகம். ஆம் வலைபதிவாளர்களின் விமர்சனம் படித்தவர்களை நேரடியாக சென்றடைந்தது. அதன் விளைவும் அனைவரும் அறிந்ததே. இதை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் கோபம் வேறுவிதமாக வலை பதிவாளர்களை தாக்குகிறது . இந்த சிலமாதங்களில் பெரும்பாலான google blogspot blogs  திறக்கமுடியாத நிலைமையில் உள்ளன. ISP  எனப்படும்  service provider களிடம் மிகவும் போராடியே அவைகளை வலை பின்னலில் திறக்க செய்ய வேண்டிஉள்ளது.

இதில் அதிசயமான ஒன்று இன்றுவரை google இதுகுறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாததுதான்.  Google அமைதியை  உடைக்கும் போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். கூடிய சீக்கிரம் வரவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும் கூட!!!!!!!

Thursday, February 10, 2011

ஊழல் குற்றசாட்டுகளுக்கு தண்டிக்கப்படவேண்டியவர்கள் அரசியல் வாதிகளா ? அதிகாரிகளா?

                 சமீப காலகட்டத்தில் இந்தியாவில்  அரசியல் வாதிகளுக்கு எதிரான ஊழல் குற்ற சாட்டுகள் கவலை யளிப்பதாக உள்ளன. இதில் ஒட்டுமொத்த அரசியல் வாதிகளும் மக்களை கோமாளிகளாகவும்  ஏமாளி களாகவும் எண்ணி தங்கள் அரசியல் நாடகத்தை  அரங்கேற்றுவது வெட்ககேடான ஒன்று.
அலை கற்றை ஊழல் விசயத்தில் அரசியல் வாதிகளின் அணுகுமுறையை சற்று கூர்ந்து கவனித்தால் விஷயம் புரியும். எதிர் கட்சிகள் விசாரணை கோரி போராட்டம் நடத்தினால் ஆளும் கட்சி பதிலுக்கு விசாரணை நடத்தலாம் ஆனால் முந்தைய உங்கள் ஆட்சி காலத்தையும் சேர்த்து விசாரணை செய்யலாம் என்கின்றனர். அப்படியானால் யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்பது தானே உண்மை!
                         இவ்வளவு துணிச்சலாக அரசியல் வாதிகள் குற்றம் புரிய உதவிசெய்வதும், துண்டுவதும் யார் ? சந்தேகமே இல்லாமல் அரசு பணியில் முதல் நிலையில் உள்ளவர்கள் தான். எழுத படிக்கச் தெரியாத ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும் பொழுது ஒன்றுமே தெரியாமலே பதவி ஏற்கிறான்.ஆனால் அவனுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் ஊழல் செய்வது எப்படி என்றும், சட்டத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் பாடம் எடுக்காத குறையாக கற்பிகின்றார்கள். ஆக பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலே அரசியல் வாதிகள் மிக திறமை வாய்ந்த ஊழல் பெருச்சாளிகளாக அதிகாரிகளின் தயவால் மாறிவிடுகின்றனர். எனவே அரசியல் வாதிகளை தண்டிப்பதை விட அதிகாரிகளை தண்டிப்பதே ஊழலை தடுக்க பெரிதும் உதவும்.
          நீங்கள் அறிந்திருப்பீர்கள், பெரும்பாலான ஊழல் தொடர்பான திட்டங்களின் கோப்புகள் நீதி விசாரணைக்கு வருமுன்னரே காணமல் போய்விடுவதான் காரணம் தெரியுமா?
          சம்மந்தப்பட்ட கோப்புகளில் நேர்மையான அதிகாரிகள் திட்டங்களுக்கு எதிரான குறிப்புகள் எழுதி இருப்பார்கள் அந்த கோப்புகள் அப்படியே சமர்ப்பிக்க படுமானால், ஊழல் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு துணை போனவர்களும் மாட்டிகொள்வார்கள் என்பதாலேயே மறைக்க பட்டுவிடுகின்றன.
             ஆக எல்லா விதத்திலும் அதிகாரிகளின் பங்கு ஊழலில் அதிகம் என்பதால் ஊழலை கட்டுபடுத்தவேண்டுமானால் துணைபோகும் அதிகாரிகளை முதன்மை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனைக்கு உட்படுத்தினால் மட்டுமே  ஊழலை ஒழிக்க முடியும்.

Wednesday, February 9, 2011

இலங்கை வரும் நாட்களில் இந்தியாவின் மிகபெரும் அச்சுறுத்தல் !!!!!!!

          நமது நாட்டை பொறுத்தவரை தென்பகுதி அதுவும் குறிப்பாக தமிழகம் என்றுமே அமைதி பூங்கா வாகத்தான் திகழ்ந்து வந்தது.ஆனால் இலங்கை வாழ் தமிழர்களின் முதுகில் இன்றைய ஆட்சி யாளர்கள் என்று குத்தினார்களோ; அன்றே நாட்டின் தென்பகுதி பாதுகாப்பு கேள்விகுறியாகி விட்டது. இலங்கை தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்தியர்களின், குறிப்பாக தமிழின துரோகிகளின் ஆதரவை பயன்படுத்திகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் அதே சமயம் சீன பாகிஸ்தான் உடனான நட்பை  கொல்லைபுறம் வழியாக பலப்படுத்தி கொண்டனர் .
             தமிழ் போராளிகளை அழித்து ஒழிக்க ஆயுத உதவிகளை தாரளமாக செய்த சீனா தெற்கு இலங்கையில் ஒரு துறை முகத்தை நவீன படுத்துகிறது . நமது ஒட்டு பொறுக்கிகள்  அவர்கள் துறைமுகத்தை அவர்கள் நவீன படுத்தினால் என்ன என்று கேள்வி கேட்பார்கள் , ஆனால் பாதுகாப்பு துறை வல்லுனர்களின் கருத்துப்படி மிக குறைந்த அவகாசத்தில் அந்த துறைமுகத்தை ஒரு அதிநவீன கப்பல்  படை தளமாக சீனா வால் மாற்ற முடியும். இந்தியாவின் வடக்கில் அத்துமீறும் சீனா தற்போது தெற்கிலும் கால் பதிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது.இலங்கையில் சீனர்களின் நுழைவு நேரடியாக இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தல். இலங்கையில் இருந்து தாக்கும் தொலைவில் தான் நமது அணுமின் அமைப்புகளும் மற்ற சில முக்கிய கேந்திரங்களும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 சமிபகாலமாக  சீனா இந்தியாவை மாநிலங்களவில் சிறுசிறு நாடுகளாக துண்டாட நினைக்கிறது . அப்படி அஸ்ஸாம் , அருணாச்சல், காஷ்மீர் என்று துண்டாடும் பட்சத்தில் சீனவின் நேரடி போட்டியான இந்தியாவை இல்லாமல் செய்துவிடமுடியும். அதன் ஒருபகுதியாகத்தான் காஷ்மீர் மக்களுக்கு தனி பாஸ்போர்ட் விசா என்று மறைமுக தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளுகிறது.
         உள்நாட்டுக்குள் வெங்க விலை ஏறுவதே, ஆட்சி யாளர்களுக்கு தாமதமாகத்தான் உறைக்கும் நிலைமையில் தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் வந்தபின் தான் விழிப்பார்கள் என்பதே உண்மை.
இதுமட்டும் அல்லாமல் பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு இலங்கையின் வடபகுதியில் கொரிலா போர் பயிற்சி பாசறைகளை அமைக்க இருப்பதும்  கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். 
          ஆக இந்தியாவின் அயல்நாட்டு கொள்கையானது ,( இலங்கை விசயத்தில்) நம் நாட்டின் நலனுக்கும் பாது காப்புக்கும் எதிரானது என்பதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.


என்ன? சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளுவது என்ற சொலவடை நினைவுக்கு வருகிறதா ?

Monday, October 11, 2010

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி ?     

    அரசு பள்ளிகளை பற்றி ஒரு தவறான இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஒரு மட்டமான எண்ணம் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது என்பது மிகவும் உண்மை. இதற்கு யார் காரணம் அரசா? அரசியல் வாதிகளா? அல்லது மக்களா? என்று பகுத்து ஆய்வதுவே இந்த மடலின் நோக்கம்.

     நாட்டுகாக உழைப்பதாய்  மார் தட்டிக்கொள்ளும் எத்தனை அரசியல் வாதிகளின் குழந்தைகள் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்?  சரி அவர்கள் தான் போகட்டும் எத்தனை அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் நகராட்சி பள்ளிகளில் படிகிறார்கள்? சரி அவர்களையும் விட்டுவிடலாம்  அந்த பள்ளிகளில் பணிபுரியும் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிகிறார்கள் ? வேதனையான உண்மை என்ன வென்றால் அவர்களின் குழந்தைகளே வேறு தனியார் பள்ளிகளில் படிகிறார்கள். ஆக அந்த ஆசிரியர்களுக்கே தங்களின் திறமையில் நம்பிக்கை இல்லையா? அல்லது அரசு, பள்ளிகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவது இல்லையா என்று பார்த்தோமானால் அரசு மற்றும் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த புறகணிப்பு தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
        சரி இதை சரிப்படுத்தி கல்வி கூடங்களின் நிலைமையை மேம்படுத்த என்ன செய்யலாம் ?
 முதல் கட்டமாக அரசு பணிபுரியும் அனைவரின் குழந்தைகளும் அரசு பள்ளியில் தான் கல்வி பயில வேண்டும் என்பதை கட்டாய படுத்த வேண்டும் மீறி அவர்கள் தனியார் பள்ளிகளை படிக்கவைக்க விரும்பும் பட்சத்தில் அதே  தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை அரசுக்கு செலுத்திவிட்டு தனியார் பள்ளியில் படிக்கவைக்க அனுமதிக்கலாம் இந்த மாற்று திட்டத்தினால் அரசுபள்ளிகளில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் குழந்தைகள் அதிகம் படிப்பதால் மாற்றந்தாய் மனபோக்கு மாறி பள்ளிகளின் தரம் மேம்படும்.

Monday, September 27, 2010

பள்ளி குழந்தைகளுக்கு தனி பயிற்சி(Tution) வரமா சாபமா ?

      இன்றைய  குழந்தைகளின் கல்வி தேடலின் பாதையை சற்று உற்று நோக்கினால் நமது மனம் கனத்து விடும். அதிகாலையில் முதுகில் புத்தக சுமையுடன் பள்ளிகிளம்பும் பிள்ளைகள்  மாலையில் உடலும் மனமும் சோர்ந்து வீடு திரும்பும் குழந்தைகளை அத்துடன் விடுவதில்லை பெற்றோர் மறுபடியும் மாலையில் புத்தக மூட்டை முதுகில் ஏற்றப்பட்டு , சுமைதூக்கும் கழுதையாய் தனி பயிற்சிக்காய் ஒரு கூடுதல் பயணம்.
     குழந்தைகளை கொடுமை படுத்தும் இந்த அவலத்திற்கு  யார் காரணம் ? கல்வி புதையல் தேடும் பெற்றோரா ? அல்லது காசுக்கு கடைவிரித்திருக்கும் கல்வி நிறுவனங்களா? விடை தேடி பயணித்தால் கல்விநிறுவனங்கள் மற்றும் பெற்றோரின் பேராசைக்கும் கனவுகளுக்கும் பலியாகி போனது குழந்தைகளின் நிகழ்காலம் மட்டுமல்ல ஆரோக்கியமான வருங்கால இந்தியா என்ற கனவும் தான் !
   சரி இந்த தனி பயிற்சிக்கு என்ன அவசியம் ? அப்படியானால் பள்ளிகளில் என்ன தான் சொல்லி கொடுகிறார்கள்? சரியான முறையில் பள்ளிகளில் சொல்லிகொடுபதிலையா ? அப்படி சொல்லிகொடுக்கதானே கட்டணமாக பெரும்தொகையை கொட்டிகொடுகிறோம் பிறகு ஏன்  தனிபயிற்சி என்று என்ற பெற்றோரும் சிந்திப்பதும் இல்லை தட்டிகேட்பதும்  இல்லை. பெற்றோரின் பொறுப்பின்மையும், மற்றபடி தட்டி கேட்க துணியாத மனோபாவம் மற்றும் பேராசையும் குழந்தைகளின் முதுகில் சுமையாய் அழுத்துவது தான் நிஜம்.
    இந்த அவலத்தில் பெற்றோரின் பங்கு அதிகம். எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் கல்விகற்றுகொள்ள அனுப்புகிறோம் கல்வி கற்றால் போதும் என்று எண்ணுவதில்லை அதற்கும் மேலாக முதல் மதிப்பெண், முதல் மாணவன், படித்து முடித்தவுடன் பெட்டிபெட்டியாய் வாங்க போகும்   ஊதியம் மட்டுமே முதன்மையாய் கருதுவதின் விளைவு தங்களின் பிள்ளைகளின் முதுகில் ஏற்றிய சுமை.
   பள்ளிகளோ பணத்தில் குறியாய் இருக்கும் அளவு கல்வித்தரத்தில் குறியாய் இருபதில்லை.தகுதி குறைவான ஆசிரியர்கள், அதிக பளு நிறைந்த  பாடத்திட்டம் இப்படி பல காரணங்கள். கட்டண குறைபிற்காக போராடும் பெற்றோரும், கூடுதல் கட்டணத்திற்காக போராடும் குழந்தைகளை பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை.
 
 ஆக மொத்தத்தில் , குறைபாடு உடைய குழந்தைகள் மற்றும் மெதுவாக கற்கும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமான இந்த தனிபயிற்சி ஏனைய குழந்தைகளுக்கு சாபமாய் போனது உண்மை. ஆனால் இந்த சுமை பெற்றோர்களும் சமுதாயமும் வலுகட்டாயமாக வலிந்து  பிஞ்சுகளின் முதுகில் ஏற்றிய சுமை என்பது தான் வேதனை நிரம்பிய உண்மை .